தற்போது தோழர் தியாகு ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் மூன்று நாட்களில் குணமாகி வெளியே வந்து விடுவார். அதனால் தான் முன்பு அறிவித்த செப்டெம்பர் 26 ஆம் நாளில் தன்னுடைய பட்டினிப் போராட்டத்தை தொடங்க முடியாமல் போனது. தற்போது காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்னிறுத்தி வரும் அக்டோபர் ஒன்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை அறிவித்துள்ளார். தோழர் தியாகுவின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள் , பொதுமக்கள் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.
-----------------------------------------------------
போராட்டக் கோரிக்கைகள்;
1. அ) இனக்கொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்கிவைக்க வேண்டும்.
ஆ) எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும், காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக்கூடாது.
இ) காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால், அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக்கூடாது.
2. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கைப் படையினருக்கு எவ்விதப் பயிற்சியும் வழங்கக்கூடாது.
3. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடலடிக் கம்பி வடம் வழியாக மின்சாரம் கொடுப்பதற்குச் செய்துள்ள ஒப்பந்தத்தை நீக்கம் செய்ய வேண்டும்.
4. சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தும் வகையில், தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்து, மீனவ இளைஞர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்க வேண்டும்.
5. 1974, 1976 ஆண்டுகளில் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்துகொண்ட கச்சத்தீவு உடன்படிக்கைகளை நீக்கம் செய்து, தமிழகத்தின் பிரிக்க முடியாத பகுதியான கட்சத்தீவை மீட்டு தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
6. அ) தமிழகத்தில் இன்னமும் செயல்பட்டுவரும் ஈழத் தமிழர் அகதி முகாம்களைக் களைத்து விட வேண்டும்.
ஆ) அகதி உரிமை தொடர்பான ஜெனீவா உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட வேண்டும்.
இ) அகதி உரிமைகள் தொடர்பான நீதிபதி பி.என்.பகவதி குழு வரைந்துள்ள மாதிரிச் சட்ட முன்வடிவை, இந்திய அரசு, உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்க வேண்டும்.
ஈ) தமிழீழ அகதிகளை இந்தியக் குடிமக்களுக்கு நிகராக நடத்தும் வகையில், அவர்களுக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
உ) தமிழகத்தில் வாழும் தமிழீழ மக்களின் பொருளியல், குடியியல், அரசியல் உரிமைகளை இந்திய அரசும் தமிழக அரசும் முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.
ஊ) ஈழத் தமிழ் அகதிகள் எவரையும் அவர்களது விருப்பத்திற்குப் புறம்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதோ, இந்தியாவைவிட்டு வெளியேற்றுவதோ கூடாது.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment