Monday, September 30, 2013
ஒரு தகுதியும் இல்லாத இந்தியை ஆட்சி மொழியாக்கி எல்லா மாநிலங்களில் இந்தியா திணித்தது; இந்தியாவின் நரித்தனம் மற்றும் தமிழர்களின் அலட்சியம்.
இந்திக்கு அடிமையாவதை தவிர வேறு வழியில்லை என்று ஒருவர் புலம்பி பதிவிட்டுள்ளார்.
//துபாய்க்கு வந்து இன்றோடு ஒரு வாரம் கடந்துவிட்டது.'இந்தி' மொழியை தவிர எனக்கு இங்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை.இந்தி மட்டுமே இப்போது பிரதான பிரச்சினை எனக்கு......... அடுத்த வீட்டு மொழியான ஆங்கிலத்தை கற்றுக்கொண்ட நான் என் சகோதர மொழியான இந்தியை புறக்கணித்தது என் தவறுதான்.இந்தி எதிர்ப்பு என்ற அரசியல் சூழ்ச்சியால் தமிழர்களின் இரண்டு தலைமுறை இந்தியாவுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்து விட்டது.மும்மொழி கொள்கையை பின்பற்றிய மலையாளிகள் பல துறைகளிலும் வியாபித்துவிட்டனர்.இந்திய பிரதமர் அலுவலக ஊழியர்களில் முப்பது சதவீதம் பேர் மலையாளிகள்.அதனால் இந்திய அரசியலையும் அதன் திட்டங்களையும் தமக்கேற்ப வளைத்து விடுகிறார்கள்.ஆங்கிலம் அழிக்காத தமிழையா இனி இந்தி அழித்துவிட போகிறது?//
இவருக்கு நம் பதில்
ஏற்கனவே ஆங்கிலம் தமிழை பாதி அழித்து விட்டது . ஆங்கிலம் கலக்காமல் தமிழகத்தில் ஒருவருமே தமிழ் பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்தியை வெளிநாட்டில் சென்று பிழைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்கு கட்டாய பாடமாக்கினால் இந்தி பாதியும் ஆங்கிலம் பாதியும் தான் தமிழர்கள் பேசுவார்கள். இந்தி எதிர்ப்பு என்பது அரசியல் சூழ்ச்சி அல்ல . நம் மொழி உரிமையை நிலைநாட்ட நாம் செய்த உன்னதமான போராட்டம். இதனால் நாம் அடைந்த அடையப்போகும் பலன் ஏராளம் . இந்தியாவிற்கே பாடம் கற்பித்தோம். இந்தியர்கள் அனைவரும் தமிழர்களை கண்டு வியக்கிறார்கள். இந்தி பேசும் மக்களும் தமிழகம் வந்தால் தமிழ் கற்க வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்கி உள்ளோம் . இது ஒரு தேசிய இனத்திற்கான வெற்றி இல்லையா ?
சரி இந்தியின் தற்போதைய ஆதிக்கத்திற்கு காரணிகள் என்ன ? ஒரு தகுதியும் இல்லாத இந்தியை ஆட்சி மொழியாக்கி எல்லா மாநிலங்களில் இந்தியா திணித்தது, 66 ஆண்டுகளாக அதற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்தது இந்திய அரசு. வெளிநாடுகளிலும் இந்தி வளர்ச்சி துறையை உருவாக்கியது. மற்ற இந்திய மொழிகளை வளர்ப்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை.
தமிழை ஆட்சி மொழியாக்கி இருந்தால் இந்நேரம் இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் தமிழ் பரவி இருக்கும் . அரேபியர்கள் கூட தமிழ் பேசி இருப்பார்கள் . ஆட்சி மொழியாக இல்லாமலேயே தமிழ் சீனாவிலும் ஜப்பானிலும் கொடிகட்டி பறக்கிறது. ஆட்சி மொழியாக வந்திருந்தால் உலகையே ஆட்டி வைத்திருக்கும் தமிழ் மொழி . அதை செய்யாமல் விட்டது இந்தியாவின் நரித்தனம் மற்றும் தமிழர்களின் அலட்சியம். ஈழம் இருந்த அவரை தமிழ் மொழி உலகெங்கும் பரவியது. இப்பொது நமக்கு ஈழ அரசும் இல்லை.
போனது போகட்டும். நம் காலத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவோம் . எல்லா மாநிலம் மற்றும் நாடுகளிலும் தமிழை பரப்பும் முயற்சியை மேல்கொள்வோம் . உலகில் எங்கு சென்றாலும் தமிழை காண்போம் . தமிழை கேட்போம் . இந்தி தெரியவில்லையே என்ற புலம்பல்களை காணாமல் செய்வோம். அதற்கான செயல் திட்டங்களில் நாம்விரைவில் இறங்குவோம்.
-இளையவேந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment