ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த தம்பி நீலவேந்தன் தம்பி திலீபன் உயிர்நீத்த நாளில் உயிர் ஈகம் செய்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நண்பர் சுந்தரராசன் அதிகாலையிலேயே இந்த துக்கச் செய்தியைத் தெரிவித்தார். பின்னர் அய்யா அதியமான் அவர்களுடன் பேசி எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். மாலை 4 மணிக்கு இடிந்தகரை போராட்ட மேடையில், தம்பி திலீபன் படத்துக்கு அஞ்சலி செலுத்தி, தம்பி நீலவேந்தனையும் நினைவு கூர்ந்தோம். நீலச்சட்டை அணிந்து எங்களைப் பார்க்க பலமுறை இங்கே வந்திருக்கும் தம்பி நீலவேந்தனை எங்களில் பலருக்கும் நன்றாகத் தெரியும். வாட்டசாட்டமான, அன்பான, அமைதியான, அருமையான இளைஞர். செப்டம்பர் 17 அன்று எங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி அரசியல், சமூக இயக்கத் தலைவர்கள் உள்துறைச் செயலரை சந்தித்தபோது, ஆதித் தமிழர் பேரவை சார்பாக தம்பி நீலவேந்தனும் சென்றிருந்தார். ஆனால் இன்று அவர் தன் உயிரை ஈகம் செய்திருப்பது அறிந்து மிகவும் வேதனையாக இருக்கிறது.
பொதுவாழ்வில் பணத்திற்காகவும், பதவிக்காகவும், தன்னலத்துக்காகவும் அடிவருடிகள் பலர் பேயாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழினம் பெற்ற தகைமைசால் தங்கங்கள், தோழர்கள் முத்துக்குமாரும், செங்கொடியும், நீலவேந்தனும், பிறரும் இப்படி அவசரப்பட்டு மறைந்துவிடுவது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வீணான உயிர் ஈகம் வேண்டாம்; வாழ்ந்து வழி தேடுவோம்!
தம்பி நீலவேந்தன் ஆன்மா அமைதி அடையட்டும்!
-தோழர் உதயகுமார்
No comments:
Post a Comment