Monday, September 30, 2013



சென்னையில் கடந்த ஞாயிறு அன்று தமிழர் தேசிய கூட்டணி நடத்திய முப்பெரும் விழா தமிழ் அறிஞர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது . முனைவர் அருகோ இதற்கு தலைமை தாங்கினார். சிலம்புசெல்வர் ம.பொ.சி அவர்களின் மகள் மாதவி பாஸ்கரன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் ஐயாவின் மகள் மணிமேகலை கண்ணன், வழக்கறிஞர் குப்பன் , உணர்ச்சிக் கவி காசி ஆனந்தன் ஐயா, மொழி ஆய்வாளர் முனைவர் சாத்தூர் சேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த விழாவில் முக்கியமான தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தீர்மானங்கள்

௧. இலங்கையில் நடந்த தேர்தலை நாம் வரவேற்கும் அதே வேளையில் , இந்த தேர்தல் வெற்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தராது என்பதை உணர்ந்து தமிழ் ஈழத்திலும் புலத்திலும் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். தமிழ் ஈழம் ஒன்றே ஈழத் தமிழருக்கான ஒரே தீர்வாகும்.

௨. ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய விரும்புகிறார்கள் . அப்பகுதியை தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் .

௩. தென்னிந்திய திரைப்படத் சங்கம் என்று பெயர் வைத்து வேற்று மொழிக் காரர்களுக்கு புகலிடமாக விளங்கும் திரைப்பட சங்கம் , தமிழருக்கான சங்கமாக மாற வேண்டுமெனில் தமிழ்நாடு திரைப்பட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற வேண்டும் . அப்படி பெயர் மாற்றம் செய்யவில்லை எனில் தமிழக அரசு திரைப்பட சங்கத்திற்கு எந்த உதவியும் வழங்கக் கூடாது .

௪. திருச்சி விமான நிலையத்திற்கு வேற்று இனத்தார்களின் பெயரை சூட்டக் கூடாது . திருச்சியில் வாழ்ந்து தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் பெயரையே சூட்டுதல் வேண்டும் ,

௫. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகள் , தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் . வேற்று மொழியினரை தேர்தலில் நிறுத்தக் கூடாது . அவ்வாறு நிறுத்தினால் அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது .

௬. தமிழை கொல்லும் ஊடங்கங்கள். ஊடகங்கள் , தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அதற்கான சான்றிதழ் பெற்று தான் அவர்களை வேலைக்கு ஊடகங்கள் நியமிக்க வேண்டும் . அதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும்.

௭.தமிழர் நாட்டில் மழலையர் பள்ளி முதல் பல்கலைகழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் ..கட்டணகொள்ளை ஆங்கில வழிப் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் . தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக்க வேண்டும் .

௮. தமிழர்கள் முன்னேற வேண்டுமெனில் , தமிழர் நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.

௯. இந்தியா இலங்கையோடு செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத் தீவை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . இதன் மூலம் தாக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வும் மீன்பிடி உரிமையும் கிடைக்கும்.

௧௦ தமிழகத்தின் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளும் திட்டமிட்டே நேரு அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். இந்த நீர்பிடிப்பு பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் . அதற்கான வேலைகளை தமிழக அரசு செய்தல் வேண்டும்.

௧௧. நவம்பர் 1 தமிழகம் உருவான நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் . அண்டை மாநிலங்களில் இந்த நாளை ஒரு வாரம் விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழக மக்களுக்கோ, என்று தங்கள் மாநிலம் உருவானது என்று கூடத் தெரியாமல் இருக்கிறது. இதை மறைத்து விட்டனர் ஆட்சியாளர்கள் . நாம் பல பகுதிகளை இழந்தாலும் , தமிழ் நாடு என்ற ஒரு மாநிலத்தை பெற்றுள்ளோம் . இதை கொண்டாடினால் தான் தமிழர் இழந்த பகுதியை மீட்க முடியும் . அதனால் நவம்பர் 1 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் .


-இளையவேந்தன்

No comments:

Post a Comment