Sunday, September 22, 2013

வடமாகணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதால் தமிழர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிவிட்டனர் என்று பலரும் நினைக்கிறார்கள். முதலில் இது ஒரு அப்பட்டமான பொய் என்று உணர வேண்டும்.


இந்த தேர்தல் வெற்றி என்பது எந்த வகையிலும் தமிழர்களின் உரிமையையோ அல்லது தமிழர்களுக்கான நீதியையோ பெற்றுத் தரப் போவதில்லை என்பதே உண்மை. இருப்பினும் இந்த தேர்தல் வெற்றி தமிழர்கள் தாங்கள் இன்னும் ஒரு இனமாகத் தான் இருக்கிறார்கள் என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் தெரியப்படுத்தி உள்ளது. இது இந்தியாவிற்கும் இலங்கை அரசுக்கும் விடப்பட்ட பெரும் சவால். இதன் மூலம் சிங்களமும் இந்தியாவும் வேறு எந்த வகையில் தமிழர்களின் ஒற்றுமையை தகர்க்கலாம் என்று கூடி முடிவெடுக்கும். எவ்வாறு தமிழகத்தில் தமிழர்கள் ஆட்சி செய்ய முடியாத நிலை உள்ளதோ அந்த நிலை ஈழத்திலும் விரைவில் வரும். தற்போது சிங்கள குடியேற்றம் முழுமையாக நடந்தேறவில்லை. அது முழுமை அடைந்து விட்டால் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை எக்காலத்தும் பிடிக்க முடியாது.

இப்போது விக்னேஸ்வரன் சிங்கள இந்திய ஆதரவு அமைச்சராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவும் சிங்களமும் என்ன சொல்கிறதோ அதைத் தான் செய்வார். அடுத்தது இவர் இலங்கையின் போர்குற்றங்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தக் கூடாது, இங்கு இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று சிங்கள அரசுக்கு துணையாக நின்று குரல் எழுப்புவார். உலக நாடுகளும், தமிழர்களே சொல்லி விட்டனர், இனி எந்த பிரச்னையும் தமிழர்களுக்கு இல்லை என்று அறிவித்து விடும். இதை தான் சிங்களமும் இந்தியாவும் விரும்புகிறது.

உண்மையான நீதி கிடைக்க வேண்டுமெனில் சிங்களம் தனித்து விடப் படவேண்டும். தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்கு இலங்கை தண்டிக்கப் படவேண்டும். தமிழர்கள் இறையாண்மை உள்ள தமிழர் அரசை கட்டி எழுப்புவது ஒன்றே தமிழர்களுக்கு பாதுகாப்பாகும். தமிழ்த் தேசிய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளும் வழியாகும். அதற்கான உள்நாட்டு வெளிநாட்டு போராட்ட களத்தை உலகத் தமிழர்கள் உருவாக்குவோம்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment