Sunday, October 20, 2013

"கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த அளவுக்கு கன்னடர் என்ற உணர்வுடன் வாழ்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கன்னடர்கள் கொடை குணம் மிக்கவர்கள். கர்நாடகத்துக்கு வந்து வசிக்கின்றவர்கள் யாரானாலும் அவர்கள் இங்கு கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடம் பேச வேண்டும்" - கர்நாடக முதல்வர் சித்தராமையா கன்னட நாள் விழாவில் பேசியது. தமிழக தமிழர்களே நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம்! தமிழக அரசு இந்நாளை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்துவோம்.



"இந்தி"(தீ)ய ஒன்றியத்தில்  மெட்ராசு மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு ஆந்திரா , கேரளம், கர்நாடகா , தமிழ்நாடு உருவாகியது நவம்பர் 1 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு. இந்த நாளை தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்கள் ராச உத்சவ திருவிழாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

கர்நாடகாவில் ஒரு மாதம் வரை கொண்டாடுகின்றனர் . இந்த நாளில் கன்னட கொடி ஏற்றி , கன்னட தாய்க்கு மரியாதை செலுத்தி கன்னட தேசிய எழுச்சி திருநாளாக கொண்டாடுகின்றனர் கன்னடர்கள். அதே போல் தெலுங்கர்களும் கொண்டாடுகின்றனர். 
இதே நாளில் தான் தமிழகமும் உருவாகியது. அதாவது தமிழர்கள் அனைவரும் ஒரே ஆட்சியின் கீழ், தமிழ்நாடு என்ற அரசின் கீழ் , தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் கீழ், தமிழ்நாடு என்ற அடையாளத்தின் கீழ் வந்த தினம் இந்த நவம்பர் 1 நாள் தான் . அதுவரை தமிழர்கள் தமிழ்நாடு என்ற ஒரு நாட்டின் கீழ் எப்போதும் வாழ்ந்ததில்லை.

இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம் அல்லவா. இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் அல்லவா ? 
தமிழகம் உருவான போது திராவிட இயக்கங்கள் சரியாக போராட முன்வராத காரணத்தால், தமிழகம் இழந்த பகுதிகள் 135,000 சதுர கி மீட்டர் ஆகும். இந்த பகுதிகள் ஆந்திராவும் , கர்நாடகாவும், கேரளாவும் பிரித்துக் கொண்டன. நாம் இவ்வளவு பெரிய நிலப்பரப்பை இழந்தாலும் , தமிழர்களுக்கு என்று ஒரு நிலப்பரப்பை தற்போது பெற்றுக் கொண்டோம் .

இது தமிழினம் வாழும் இடமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் , நாம் இருப்பதை காக்கவும் , இழந்ததை மீட்கவும் தமிழகம் உருவான நாளை ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டியது காலத்தில் கட்டாயம் ஆகும். 

மற்ற மாநில மக்களுக்கு தங்கள் மாநிலம் உருவான நாள் தெரியும் . அந்த நாளை அவர்கள் போற்றி கொண்டாடுகிறார்கள் . ஆனால் தமிழனுக்கு மட்டும் தன்னுடைய தமிழ்த் தேசம் உருவான நாள் தெரியாமலே போனது. அதை "இந்தி"(தீ)ய ஒன்றியமும், தமிழக அரசும் மறைத்தே வந்துள்ளது. இனியும் நாம் அவ்வாறு அறியாமையில் இருக்க முடியுமா?

நம்முடைய தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை , மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் வேண்டும் .

அந்த வகையில் தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் தமிழக அரசு நவம்பர் 1 ஆம் நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அதை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் .

அன்று தமிழகம் முழுவதும் தமிழர் வரலாறு , பண்பாடு குறித்த கண்காட்சி இடம்பெற வேண்டும் . இதை நாம் இப்போது செய்யத் தவறினால் நாளை தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழப்பதோடு மட்டுமில்லாமல் , தமிழகத்தில் தற்போதைய நிலப்பரப்பையும் இழக்க நேரிடும். 

அதனால் தமிழக தமிழர்களே நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம். அனைத்து கட்சித் தலைவர்களும் இதை அரசுக்கு வலியுறுத்தும்படி செய்வோம். இனியாவது தமிழ்நாட்டின், தமிழரின் அடையாளத்தை தக்க வைக்க நம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் .

வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை! சுடர்க தமிழ் நாடே!

"கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த அளவுக்கு கன்னடர் என்ற உணர்வுடன் வாழ்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கன்னடர்கள் கொடை குணம் மிக்கவர்கள். கர்நாடகத்துக்கு வந்து வசிக்கின்றவர்கள் யாரானாலும் அவர்கள் இங்கு கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடம் பேச வேண்டும்" - கர்நாடக முதல்வர் சித்தராமையா கன்னட நாள் விழாவில் பேசியது. 

இந்திய ஒன்றிய கட்சியான காங்கிரசு அங்கு ஆட்சி செய்தாலும் கர்நாடக முதல்வர் ஒரு கன்னடர். அவரின் இனத்திற்கும் மொழிக்கும் உண்மையாக உள்ளார். அதனால் தான் கர்நாடகாவில் உள்ள அனைவரும் கன்னடம் பேச வேண்டும், கன்னடராக உணர வேண்டும் என்று கூறி உள்ளார். 

இப்படியான வாசகத்தை தமிழகத்தில் தமிழக முதல்வர்கள் எவரும் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் வீழ்ச்சிக்கு தமிழர் நாட்டை ஒரு இன உணர்வுள்ள தமிழர் ஆளவில்லை என்பதே முக்கிய காரணமாக உள்ளது. திராவிட ஆரிய ஆட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டி அடித்து தமிழர் நாட்டை தமிழரே ஆளும் வகை செய்வது தான் தமிழர்களின் முதன்மை கடமையாக உள்ளது.

"வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை! சுடர்க தமிழ் நாடே!

 

No comments:

Post a Comment