Sunday, November 3, 2013

இந்த மாமனிதரைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை...இன்றைய சுயநலவாத உலகில் இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.. உங்களை போல சிலரால்தான் இன்னும் மனிதம் வாழ்கிறது அய்யா

 

கலைந்த தலை செருப்பில்லாத கால்கள்.
அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் அரியின் அடையாளம். யார் இந்த அரி.


மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர்.
சென்னையில் கடந்த வாரம் சுதேசி என்ற பருவ இதழ் நடத்திய சாதனையாளர்களுக்கான "துருவா விருது' வழங்கும் விழாவில் விருது பெறுவதற்காக உட்கார்ந்திருந்தார் அவர்.

தாய்,தந்தையை இழந்த நிலையில் வறுமையும், வாழ்க்கையும் விரட்ட இவர் 12 வயதில் தஞ்சம் அடைந்த இடம்தான் மதுரை தத்தநேரி மயானமாகும்.

பசிக்காக நேர்மையான எந்த வேலையும் செய்யத் தயராக இருந்த அரிக்கு அங்கிருந்த வெட்டியான் எனப்படும் மயான உதவியாளர்களின் உதவியாளாக இருக்கும் வேலை கிடைத்தது.

வேலை கிடைத்தது என்பதோடு நேர, நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது.
மயானம் இவருக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்தது, அதில் முக்கியமானது எதற்கும் ஆசைப்படாதே என்பதுதான்.


இதன் காரணமாக இவர் படிப்படியாக வளர்ந்து மயான உதவியாளராக மாறி கிட்டத்தட்ட நாற்பது வருட காலமாக இந்த வேலையை செய்த போதும், தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தன் தேவைக்கு மேல் வருவது அனைத்தையும் சேவைக்காக செலவிட்டு வருகிறார்.

ஏழை மாணவ, மாணவியரை படிக்க வைப்பது, அரசு மருத்துவமனைளுக்கு கட்டில் வாங்கிக் கொடுப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர துவிச்சக்கர வண்டி வாங்கிக் கொடுப்பது, பார்வையற்றவர்களுக்கு ஊன்று கோல் வழங்குவது என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்.

கையில் கொஞ்சம் காசு இருந்துவிட்டால் தகுதியான ஆளை தேடிப் பிடித்து அவர்களுக்கு உதவி செய்ய இவர் கிளம்பி விடுவார்.

இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரம் சடலங்களை எரித்தும், புதைத்தும் உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற சடலங்களுக்கு இவரே உற்றமும், நட்புமாக இருந்து இறுதிச் சடங்கினை செய்துள்ளார்.

இந்த விடயங்களை எல்லாம் கேள்விப்பட்டதன் அடிப்படையில்தான் அவருக்கு விருது வழங்கப்பட்டது. சுதேசி நிர்வாக ஆசிரியர் பத்மினி ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் சிண்டே, முன்னாள் காவல்துறை அதிகாரி நந்தபாலன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து வழங்கிய விருதினை வாங்கும்போது எழுந்த கைதட்டலின் சத்தத்தில் அரங்கம் அதிர்ந்தது.

எவ்வளவோ பேரின் சடலங்களை எரித்தும், புதைத்தும் வரும் அரியின் விருப்பம் என்ன தெரியுமா? தன் மரணத்திற்கு பிறகு தனது உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது மாறாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு உதவியாக தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கிவிட வேண்டும் என்பதுதான்.

இம் மாமனிதருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவியுங்கள்.

அனைத்து மனதும் ஏங்குவதும் சிறு பாராட்டிர்க்குத் தானே!!!!!!  

அரியுடன் தொடர்பு கொள்ள: 7708375255.

No comments:

Post a Comment