Monday, November 4, 2013

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுத வேண்டும் எனக் கூறும் தமிழறிவற்ற சயமோகனுக்கு !!! தமிழில் உள்ள சிறப்பொலிகள் ற் , ண், ழ் போன்றவற்றையும், மற்ற இலக்கண குறிப்புகளையும் ஆங்கிலத்தில் உள்ளவாறே எழுத முடியுமா ? மூன்று வகையான லகரங்களை ஆங்கிலத்தில் அப்படியே எழுத முடியுமா ? தமிழின் சுவையை தமிழ் எழுத்துரு இல்லாமல் ஆங்கில எழுத்துருக்களால் அப்படியே எடுத்துக் காட்ட முடியுமா ? தொல்காப்பியர் வகுத்த இலக்கணம் ஆங்கில எழுத்துருக்களுக்கு பொருத்திப் போகுமா ? இந்த கேள்விகளுக்கு நிச்சயம் இல்லை என்பதே பதில் ஆகும்!!! எவானாலும் மறுக்க முடியுமா????

 

இங்கு இணைக்கப்பட்டுள்ள திருக்குறளை பாருங்கள் . மேலே தமிழ் எழுத்துருக்கள். கீழே ஆங்கில எழுத்துக்கள். தமிழர்கள் இனி வரும் காலங்களில் கீழே உள்ளது போல ஆங்கில எழுத்துரு கொண்ட திருக்குறளை படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் எழுத்தாளர் சய மோகன்.

அவர் சொல்லும் காரணம், ஆங்கில எழுத்துருவை பயன்படுத்தி தமிழை எழுதினால் தான் அடுத்த தலைமுறை தமிழர்கள் தமிழ் மொழியை படிப்பார்கள் என்பது தான். தமிழின் நிலை இப்போது கவலைக் கிடமாக உள்ளது, யாரும் தமிழ் மொழியை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை அதனால் வரும் தலைமுறைக்கு தமிழ் செல்ல வேண்டுமெனில் தமிழை ஆங்கில எழுத்துருவை கொண்டு தமிழை எழுதுவதே சிறந்தது என்று ஆலோசனை கூறுகிறார் சயமோகன். 

எங்கும் தமிழ் என்ற நிலை மாறி எங்கும் ஆங்கிலம் என்ற நிலைக்கு இப்போது தமிழகம் மாறி வருவது அனைவரும் அறிந்ததே. அதே நேரம் இணையத்தில் தமிழ் மொழி நிலைப் பெற்றுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது . தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்றுக் கொடுக்க முன்வருவதில்லை என்பது யாருடைய பிழை?

தமிழை எல்லா தளங்களிலும் கொண்டு சேர்க்கும் கடமை தமிழக அரசுக்கும் , தமிழ் பேசும் மக்களுக்கும் அல்லவா இருக்கிறது. தமிழை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி மொத்தமாக தமிழ் மொழியை குழி தோண்டி புதைக்கும் ஆலோசனையை வழங்குகிறார் சயமோகன் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

சரி தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவர் சொல்வது போல் சங்க இலக்கியங்களும் ஆங்கிலத்தில் மாற்றி விடுகிறோம் என்றும் வைத்துக் கொள்வோம்.

தமிழில் உள்ள சிறப்பொலிகள் ற் , ண், ழ் போன்றவற்றையும், மற்ற இலக்கண குறிப்புகளையும் ஆங்கிலத்தில் உள்ளவாறே எழுத முடியுமா ? மூன்று வகையான லகரங்களை ஆங்கிலத்தில் அப்படியே எழுத முடியுமா ? தமிழின் சுவையை தமிழ் எழுத்துரு இல்லாமல் ஆங்கில எழுத்துருக்களால் அப்படியே எடுத்துக் காட்ட முடியுமா ? தொல்காப்பியர் வகுத்த இலக்கணம் ஆங்கில எழுத்துருக்களுக்கு பொருத்திப் போகுமா ? இந்த கேள்விகளுக்கு நிச்சயம் இல்லை என்பதே பதில் ஆகும். 

தமிழின் தனித் தன்மை அதன் சிறப்பொலிகளில் இருக்கும் போதும், 'ஒற்று'கள் எங்கு எழுத வேண்டும் எங்கு எழுதக் கூடாது என்ற இலக்கண விதிமுறை உள்ளபோது ஆங்கில எழுத்துருக்களை கொண்டு நம் அடுத்த தலைமுறை தமிழ் படிக்கும் போது அவர்கள் நிச்சயம் முழுமையான தமிழை கற்று உணர முடியாது. தமிழ் என்பது இந்தி மொழி போல் புதிதாக தோன்றிய மொழி அல்ல .

அது உயர் தனிச் செம்மொழி. அதற்கான எழுதுருக்களோடு அது எழுதப்பட்டாலே, தமிழ் மொழி முழுமை பெரும். அவ்வாறு தான் தமிழ் சான்றோர்கள், மெய்யியல் அறிவர்கள் தமிழை எழுதி வந்துள்ளனர். உயர்ந்த தமிழ் படைப்புகள் இன்னும் தமிழ் எழுத்துருக்களில் மட்டுமே உள்ளது . இவை அனைத்தும் ஆங்கிலப் படுத்தி அடுத்த தலைமுறை படிக்குமே என்றாலும், அந்த பண்டைய தமிழ் நூல்களில் உள்ள செய்திகள், பொருட்சுவை, சொற்சுவை எல்லாம் உள்ளவாறு வரும் தலைமுறைக்கு சென்றடையாது என்பதே உண்மை. 

ஆகவே சயமோகன் போன்ற அறிவு சீவிகள் , தமிழை மக்களிடம் நிலைப் பெற செய்யும் செயலை செய்யவில்லை என்றாலும் , தமிழை மொத்தமாக கொல்லும் செயலில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கும் தமிழ் எழுத்துருக்கள் மூலமாகவே சிறப்பாக எடுத்துச் செல்வோம். அதனால் தமிழை காப்பாற்றும் செயலில் சயமோகன் போன்றவர்கள் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

 

No comments:

Post a Comment