Tuesday, October 1, 2013

இன்று பாலச் சந்திரன் பிறந்த நாளும் உலக சிறுவர்கள் தினமும், ஈழத்துச்சிறார்களின் அவலங்களும், உரிமைமீறல்களும்.



வீரத்தமிழ் மறவன் மகன் உதித்த நாளில்,இன்று உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது அந்தப்பாலகனைப்போல் எத்தனை எத்தனை இளம்பிஞ்சுகளை, எம் தமிழ் மண்ணில் சிங்களகொடியர்கள் புதைத்துள்ளார்கள்.கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வுகளாக, மறக்க முடியாதபடி நெஞ்சுக்குள் கிடக்கின்றன.முள்ளிவாய்க்கால் போரில் பல குழந்தைகள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பது ஏதும் அறியாத குழந்தைகளையும் படுகொலை செய்த மாபெரும் குற்றங்கள் நிரம்பிய யுத்தம். அது குழந்தைகளையும் சிறுவர்களையும் பலி எடுத்தது. தாயின் கருவில் இருந்த குழந்தைகளைகூட திட்டமிட்டுக் கொன்றுபோட்டது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்களும் காணாமல் போயிருக்கிறார்கள். சனல்4 வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றில் பல இளைஞர்களுடன் ஒரு சிறுவனும் பின்னால் கை கட்டப்பட்டு இருக்கிறான். அவன் பிறிதொரு படத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கின்ற காட்சியும் வெளியானது.
காணாமல் போன சிறுவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை பாலச்சந்திரன் போன்ற சிறுவர்களுக்கு யுத்த களத்தில் நடந்த கதைகள் உணர்த்துகின்றன. இரக்கமற்ற கொலைவெறிப் படைகள் சிறுவர்கள் என்றுகூட பார்க்காமல் அவர்களின் பிஞ்சு நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தமது கொலைவெறியை தீர்த்துக் கொண்டன.

போர் சிறுவர்களை கொன்று குவித்துடன் தனது கோரத்தை முடிவுபடுத்தவில்லை. அவர்களை யுத்த களத்தில் காணாமல் போகச் செய்ததுடன் தனது கோரங்களை நிறுத்தவில்லை. அது நிறையச் சிறுவர்களின் அங்கங்களையும் பறித்திருக்கிறது.தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்து தவிக்கும் எண்ணற்ற சிறுவர்கள் . அம்மாவின் அரவணைப்பை இழந்து தவித்துத் திரியும் சிறுவர்களின் நிலமை மிகவும் மோசமாக இருக்கின்றது. அவர்கள் அன்பை இழந்து தவிப்பதுடன் தாயின் வளர்ப்பையும் இழந்துள்ளனர்.
போருக்குப் பின்னர் சிறுவர்கள்மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் பின்னரும் சிறுவர்கள் ஆபத்தான சூழலிலேயே வாழ்கின்றனர். அவர்கள் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் இராணுவத்தினரைத் தாண்டியே செல்ல வேண்டியுள்ளது. பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருத்தியை இராணுவச் சிப்பாய் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதைப்போல அண்மையில் பிறந்து ஆறுமாதமே ஆன பெண் குழந்தை ஒன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்தது. இதையும் இராணுவத்தினரே செய்திருந்தாக கூறப்படுகின்றது. தெற்குப் பகுதியில் அழுத்கம பகுதியில் விடுமுறையில் சென்ற இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அங்குள்ள சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார்.
குழந்தைகளிடையே புரிந்துணர்வையும் பொதுநிலைப்பாடடையும் கொண்டு வரும் நோக்கில் 1954இல் ஐக்கிய நாடுகள் சபையில் சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்படது. அத்துடன் 1989இல் உரிமைகளைப் பற்றிய கொள்ளை பிரகடனப்படுத்தப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பு அவசியம் என்ற அடிப்படையில் இந்தப் பிரகடனங்கள் செய்யப்பட்டன.
உலகத்தில் உள்ள அனைத்துச் சிறுவர்களுக்கும் அடிப்படை உரிமைகளை நினைவு கூறுதலும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் என்பன இந்த நாளின் நோக்கமாகும். சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சிறுவர் தினத்தில் பேசப்படுகின்றது.

No comments:

Post a Comment