Thursday, October 17, 2013

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும்! 16 10 2013



உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் மரண தண்டனை ரத்து செய்யப்படுமானால், அந்த கொலாசியம் முழுவதும் தீபங்களால் அலங்கரிக்கப்படும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

ஒரு மனிதன் தூக்கு மேடையில் ஏற்றப்படுகிறான். முகத்தை கறுப்புத் துணியால் மூடுகின்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்படுகிறது. பலகை விலக... கயிற்றில் தொங்குகிறான். இரண்டு கால்களும் அந்தரத்தில் ஊசலாடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. கழுத்து எலும்பு கண் இமைக்கும் நேரத்தில் படக்கென உடைகிறது. சுவாசத்துக்காக ஏங்குகிறான். காற்றை சுவாசிக்க முடியவில்லை. அணு அணுவாக உயிர் கசிய துடிதுடித்துச் சாகிறான்.

தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்த  உயிரியக்கப்படம் (அனிமேசன்) வீடியோவைப் பார்த்த அனைவருக்கும் நெஞ்சம் பதறியது. பார்த்தவர்கள் கண்களில் கண்ணீர் கசிந்தது!

சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளில், பேரறிவாளன் கதையை மையமாக வைத்து 'உயிர் வலி’ என்ற ஆவணப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பிய காட்சிதான் இது.

இந்த ஆவணப் படத்தை இயக்கியவர் பிரகதீசுவரன். விழாவில், மரண தண்டனை பற்றி பேசிய அனைவரது பேச்சும் நெஞ்சத்தை உருக்கியது.

பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். அவர் பேசுகையில்,

தொடக்கத்தில் என்னுடைய போராட்டம் தனியாகத்தான் ஆரம்பித்தது. அதன்பிறகு, உண்மையை அறிந்து கொண்டு நிறைய தோழர்கள் குரல் கொடுக்க வந்தாங்க. நான் ஒவ்வொரு முறையும் அறிவை பார்க்கச் சிறைக்குப் போகும்போது, அவன் சோர்ந்து இருந்து ஒருமுறைகூட பார்த்ததில்லை.

எப்போதுமே, முகத்தில் சிரிப்புடனும் நம்பிக்கையுடனும்தான் இருப்பான். செய்யாத குற்றத்துக்காக இவ்வளவு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டான். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதால்தான் 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடுகிறேன் என்று வருத்தப்பட்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,

அமெரிக்காவின் டெக்சாசு நகரில் 10 வயது சிறுமியின் தந்தை, கொலைக் குற்றத்துக்காக தூக்கிலிடப்படுகிறார். அதற்குப் பிறகு, அவள் இந்த உலகத்தைப் பார்த்து, 'இன்றைக்கு இன்னொருவரை கொன்றதற்காக இவரை தூக்கில் இடுகிறீர்கள். இவரை நீங்கள் கொன்றதற்காக உங்களில் யாரை நான் தூக்கில் இடுவது?’ என்ற நியாயமான கேள்வியைக் கேட்டாள். இந்தக் கேள்விக்கு யார் பதில் சொல்வது?

தூக்கு மேடைக்கு முன்பாக ஒரு மனிதனுடைய நடவடிக்கைகள் எவ்வாறு உயிருடனும், வாழும் கணத்தோடு நேரடி தொடர்புடனும் இருக்கிறது என்பதற்கு சான்றாக சார்சு ஆர்வெல் எழுதிய 'ஆன் ஆங்கிங்’ என்ற கட்டுரையில் இருந்து சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

தூக்கு தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட மனிதன் நடந்து தூக்கு மேடையை நோக்கி போய்க்கொண்டிருந்தான். அத்தனைக் கண்களும் அவனை கவனித்துக்கொண்டிருந்தன. அதில் நானும் ஒருவன். அவன் நடந்து செல்லும் பாதையிலே, சேரும் சகதியும் அவன் கால்கள் மீது பட்டது.

அவனது கால்கள் அன்னிச்சையாக அதை தவிர்த்துவிட, கொஞ்சம் விலகிச் சென்றான். வாழ்க்கை எனக்கு மிக அபத்தமாகப்பட்டது, அந்த கணத்தில்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தூக்கில் இடப்போகிற மனிதன் நம்மைப் போலவே அனிச்சையாக சகதியை தாண்டிச் செல்வதும், அந்தக் கணம் வரை இந்த உலகத்தோடு தொடர்பில் இருப்பதும் எனக்குள் ஒருவித நடுக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

நம்மைப் போலவே அவன் உடலிலும் இரத்த ஓட்டம் நிகழ்கிறது, அவனது வயிற்றில் செரிக்க வேண்டிய உணவு செரித்துக்கொண்டிருக்கிறது. தூக்கில் இடப்பட்ட பின்பும் சில நொடிகளுக்கு விரல்களில் நகங்கள் வளரும், இப்படி முழுவதும் உயிருடன் இருக்கின்ற ஒருவனை தூக்குக் கயிற்றை முத்தமிடச் செய்வது, மிகப்பெரிய வன்முறை என்பதை உணர்ந்தேன்!’ என்கிறார்.

நீதி என்பது ஒருவருக்கு நீதியாகவும், சிலருக்கு அநீதியாகவும் இருக்கிறது. அதேபோல ஓமன் நகரில் கொலாசியம் என்ற மிகப் பெரிய திறந்தவெளி அரங்கம் இருக்கிறது.

இன்று உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் மரண தண்டனை ரத்துசெய்யப்படுமானால், அந்த கொலாசியம் முழுவதும் தீபங்களால் அலங்கரிக்கப்படும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படுகின்ற நாளில் கொலாசியத்தில் தீபம் ஏற்றப்படும்' என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

திட்டமிட்டு மரணம் நிகழ்த்தப்படுவதுதான் வலி!

நன்றி தமிழ் ஊடகங்கள்

-ஈழ மகான் தமிழ்

 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment