Saturday, October 26, 2013

தீப ஒளித் திருநாளில் பட்டாசுகள் தவிர்ப்போம் ! இயற்கையை பாதுகாப்போம்! தீபாவளிப் பண்டிகை வரலாற்று ரீதியாக தமிழர்களின் பண்டிகை அல்ல என்பது தமிழ் ஆர்வலர்கள் பலருக்கு தெரியும். தீபஒளித் திருநாள் என்பது தமிழர்களை பொறுத்தவரை கார்த்திகை தீபத் திருநாள் தான். ஆனால் அத்திருநாளை விட தீபாவளிப் பண்டிகையை தமிழர்கள் இப்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.



தீபாவளி சுற்றி பின்னப்படும் கதைகள் எவையும் தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாத புராணக் கதைகளே ஆகும். இக்கதைகள் எவ்விதத்திலும் நம்பத்தகுந்தது அல்ல. ஆரிய மதத்தின் கதைகளே தீபாவளியின் பின்புலத்தில் இருப்பதாக உள்ளது. தமிழர் மதத்தின் கூறுகள் இப்பண்டிகையில் இருப்பதாக தெரியவில்லை.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தான் இப்பண்டிகை தமிழர்களிடையே வேற்று இன மக்களால் புகுத்தப்பட்டது. இது இயற்கையை சார்ந்த பண்டிகையும் அல்ல. தமிழர்களின் பொங்கல், ஆடிப்பெருக்கு போன்ற இயற்கை அறிகுறி சார்ந்த பண்டிகையல்ல தீபாவளி.

தமிழர்கள் என்றுமே இயற்கை சார்ந்த திரு விழாக்களை முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனால் தீபாவளிப் பண்டிகையோ இயற்கைக்கு விரோதமான திருவிழாவாக அமையப் பெற்றுள்ளது.

தீப ஒளித் திருநாள் என்றால் இல்லங்களில் விளக்கேற்றி இயற்கை அன்னையை வழிபடும் திருவிழாவாக இருத்தல் வேண்டும் . மாறாக பட்டாசு வெடித்து, புகை எழுப்பி ஒலி மாசு, காற்று மாசு , நீர் மாசு ஏற்படுவதாக அமைந்து விட்டது தீபாவளிப் பண்டிகை. இத்தகைய இயற்கையை சீரழிக்கும் பண்பாட்டை தமிழர்கள் ஊக்குவிக்கக் கூடாது . தங்கள் குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் விழிப்புணர்வு கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

பட்டாசுகள் வெடிப்பதால் பல தீமைகள் உருவாகிறது. ஒவ்வொரு முறையும் பட்டாசு தயாரிக்கும் குழந்தைகள் முதற்கொண்டு பட்டாசு கொளுத்தி விளையாடும் சிறுவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பல சமயங்களின் உறுப்பு இழப்பு, உயிர் இழப்பு கூட ஏற்படுகிறது. மேலும் விலங்குகள் இத்தகைய ஒலி மாசை ஏற்கமுடியாமல் தவிக்கின்றன. நம்முடைய சில மணிநேர மகிழ்ச்சிக்கு , நாம் பல வகையில் இயற்கையை சீரழிக்கிறோம் என்பதை பொறுப்புள்ள மனிதர்களாக நாம் உணர்தல் வேண்டும். கோடிக்கணக்காக பணம் தீயாக செலவு செய்யப்படுவதோடு, பல ஆயிரம் டன் குப்பைகள் நாடு முழுவதும் சேர்கிறது.

இதையெல்லாம் நாம் தடுக்க வேண்டும் என்றால் நாம் புகையில்லா, பட்டாசுகள் இல்லா, வெடிகள் இல்லா தீபாவளியை கொண்டாட வேண்டும். வீடுகளில் தீப விளக்குகள் ஏற்றி தீப ஒளித் திருநாளை நினைவு கூறலாம். ஒளி வழிபாடு என்பது தமிழர்களின் தொன்மையான வழிபாட்டில் ஒன்று தான் .

கார்த்திகை தீபத் திருநாள் அதையே நமக்கு உணர்த்துகிறது. ஒளியேற்றி புராணக் கதைகள் போன்றவற்றை இணைக்காமல் தீபத் திருவிழாவை கொண்டாடி மகிழலாம். புராண கதைகளில் நாட்டமிருக்கும் ஆரிய இந்துமதம் தழுவிய தமிழர்கள் இந்த திருவிழாவை புராணத்தின் அடிப்டையில் தான் கொண்டாட வேண்டும் என்று நினைத்தாலும், தயவு செய்து புகையில்லா தீபாவளியை கொண்டாடுங்கள். சுற்றுப் புற சூழலை பாதுகாத்திடுங்கள். நம் மண், காற்று மாசடையாமல் பாதுகாப்பது நமது கடமை.

பட்டாசுகள் தவிர்ப்போம் ! இயற்கையை பாதுகாப்போம்!

இயற்கை நலன் கருதி வெளியிடுவோர் - தமிழர் பண்பாட்டு நடுவம்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா " - ஆரிய திராவிட கூட்டுக்களவானிகளை கருவறுப்போம்!!!!


"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

 

No comments:

Post a Comment