Friday, September 20, 2013

நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால். இக்கொடும் செயலை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் மனித இனத்திற்கே இழுக்கு.

 
பார்வையற்ற போராளிகளை நள்ளிரவில் சுடுகாட்டில் இறக்கி தவிக்க விட்டு சென்ற தமிழக காவல்துறை!

சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாக உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன் கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகளும் பார்வையற்ற கல்லூரி மாணவர்களும் சுமார் 450 பேர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக பார்வையற்ற பட்டதாரிகள் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தனம் சிக்னல் அருகே அண்ணா சாலையில் புதன்கிழமை காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அரசுத் தரப்பில் இருந்து யாரும் இவர்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்காத காரணத்தால் போராளிகளும் தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என அறிவித்தனர். இதையடுத்து காவல்துறை ஒரு மாபாதகச் செயலில் இறங்கியது. பார்வையற்ற பெண்களை தாக்கியது . இதை சற்றும் போராளிகள் எதிர்பார்கவில்லை . தாக்கியதோடு அவர்களை குண்டுக் கட்டாக தூக்கி காவல்துறை வண்டியில் ஏற்றியது . அவர்களை வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 120 பேரும் மாலையில் விடுவிக்கப் பட்ட போதிலும் உண்ணா நிலையில் ஈடுபட்ட 19 பார்வையற்ற போராளிகளை தனியே வாகனத்தில் ஏற்றி இரவு பத்து மணிக்கு மேல் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறக்கி விட்டு 'மெரீனா கண்ணகி சிலை அருகே உங்களை நாங்கள் இறக்கி விட்டு உள்ளோம் இனி நீங்கள் போகலாம்' என்று கூறி காவல்துறை கிளம்பி விட்டது. பார்வையற்றோரும் தாங்கள் மெரீனா கடற்கரையில் தான் இறங்கி உள்ளோம் என்று நினைத்து தட்டுத் தடுமாறி நடந்த போது அது ஒரு சுடுகாடு என அறிந்து அதிர்ந்து போயினர் . பின்பு அங்குள்ள மக்களிடம் விசாரித்த போது தான் அவர்களுக்கு தெரிந்தது அது சென்னை மெரீனா கடற்கரை அல்ல உத்தண்டி சுடுகாடு என்று.

இப்படி பார்வையற்றோரிடம் இறக்கம் காட்ட வேண்டிய காவல்துறை ஒரு சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் , அவர்களை சுடுகாட்டில் இறக்கி விட்டது மிருகத் தனமான செயல். ஒருவர் தன் உரிமைக்காக போராடுகிறார் என்றாலே அவரை காவல்துறை அரசின் எதிரியாகவே பார்க்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. பார்வையற்றோர் பார்வை உள்ளவர்கள் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் காவல்துறை தனது அராஜக போக்கை இங்கு கடைப் பிடித்துள்ளது. இவர்கள் கேட்பது எல்லாம் ஒன்று தான் முதல்வரை சந்தித்து தங்கள் பிரச்சனைக்கான தீர்வு மட்டும் தான் . ஆனால் காவல்துறை இவர்களை பிரச்சனையை முதல்வர் காதுகளுக்கு எடுத்து செல்லாமலே அலைக்கழிக்கின்றனர்.

ஆனால் இது வரை தமிழக கட்சிகள் யாரும் பார்வையற்ற போராளிகளுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும் வேதனை. இவர்களுக்கு தமிழ் மக்களாகிய நாம் துணை நிற்ப்போம். இவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment