
தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்கள் கயல் (எ) அங்கயர்க்கண்ணி, பகத்சிங் மற்றும் வேல்முருகன் இன்று இரண்டாம் நாள் இரவும் நீதிமன்ற வளாகத்திலேயே தங்கி தங்கள் போராட்டத்தை முன்னேடுக்கின்றனர்.
தமிழர்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி !
தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க உண்ணா நிலைப் போராட்டம் செய்த மூன்று வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக போராடி வந்த வழக்கறிஞர்கள் கயல், பகத் சிங், வேல்முருகன் ஆகியோர், இன்று வழக்கறிஞர்கள் சங்கம் கொடுத்த உறுதி மொழி அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அகர்வால் கொடுத்த உறுதி மொழியின் அடிப்படையிலும் தங்கள் பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
நீதிபதி அகர்வால் , இனி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடலாம் என்ற வாய் மொழி உத்தரவை பிறப்பிப்பதாக உறுதி அளித்தார். மேலும் கீழை நீதி மன்றத்தில் இனி ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என்ற தீர்மானத்தை இரத்து செய்து விடுவதாகவும் கூறி உள்ளார் . இதனால் கீழை நீதிமன்றத்தில் இனி தமிழ் மொழியில் தான் தீர்ப்பு வழங்கப்படும் என அறியப்படுகிறது.
வழக்கறிஞர் சங்கம் அவர்கள் சங்கத் தேர்தல் முடித்தவுடன் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழில் வழக்காட அதிகாரப் பூர்வ நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் . உயர் நீதிமன்றத்திலும் தமிழை அலுவல் மொழியாக்க குடியரசு தலைவர் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
தமிழுக்காக, தமிழர் நலனுக்காக தொடர்ச்சியாக போராடி வந்த தமிழ் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். எதிர்க்கத் துணிந்தால் தமிழ் ஆளும் .
-இளையவேந்தன்
No comments:
Post a Comment