
தனித் தமிழ் இயக்கம் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் நினைவு நாள். கலப்புத் தமிழ் தவிர்ப்போம் ! தூய தமிழில் பேசுவோம் !
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்றும் போற்றுகிறது.நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் அந்த வரலாற்று மாந்தர் மறைமலை அடிகள்.
1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம். பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். பிந்நாளில் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பினார். அந்த பெயரை வேதம், அசலம் என்று இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். வேதம் என்ற வடமொழி சொல்லுக்கான தூய தமிழ்ச்சொல் மறை. அசலம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் மலை. சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள். எனவே சுவாமி வேதாசலம் என்ற பெயர் 'மறைமலை அடிகள்' என்றானது.
மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.
முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தல எனும் காதல் காவியத்தை தமிழில் மொழிப் பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஹிந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாகவும், குறியாகவும் இருந்தார். ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார்.
தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது. தம் வாழ்நாளில் அவர் காதலித்த விசயங்கள் இரண்டு ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆவது வயதில் காலமானார்.
'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழுலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பு வரைதான் கல்வி கற்றிருந்தாலும் ஆசிரியர் பணியை எட்டும் துணிவு அவரிடம் இருந்தது. அந்தத் துணிவால் ஆசிரியர் பணி கிடைத்தும் தன்னுடையக் கொள்கைக்காக அந்தப் பணியை விட்டு விலகி வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பி விட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அவர் தன்னுடையக் கொள்கைகளை வாழ்ந்தும் காட்டினார். இவற்றால்தான் அவருக்கு தமிழ் வரலாற்றில் ஒரு தனி இடம் கிடைத்தது. 'தனித்தமிழ்' என்ற வானமும் வசப்பட்டது. அன்னாரின் நினைவு நாளில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேசுவோம். தமிழாராய் இணைவோம். கூடிய மட்டும் தமிழரிடத்தில் தூய தமிழில் உரையாட பழகுவோம். செந்தமிழை மீட்டெடுப்போம்.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment