
திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டுப் பகுதியினுள் அயல் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்களப் பெண்மணி வழிதவறி வந்து விட்டார். அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகின்றான். இதனை அச்சிங்களப் பெண்மணி எமது இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைப்பாடு செய்தாள். உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள்.
அத்துடன் அச்சிங்களப் பெண்மணியும் அவனை அடையாளங்காட்டி விட்டார். அவ்வாலிபன் எமது இயக்கத்தினுடைய தீவிர உதவியாளனும், அங்கு பெரும்பாலான காட்டுப் பிரதேசங்களுக்கான வழிகாட்டியுமாவான். அவ்வேளை அச்சிங்களப் பெண்மணியானவள் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் சிலரின் உதவியுடன் அங்கு அமைந்துள்ள சிறிய வைத்தியசாலை ஒன்றிற்கு வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.
இச்செய்தியை மூதூர் பிரதேசப் பொறுப்பாளர் தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவாக அறிவித்து என்ன செய்வதென்று கேட்டார். அத்துடன் அச்சிங்களப் பெண்மணியைக் வல்லுறவுக்கு உட்படுத்திய வாலிபன், அச்சிங்களப் பெண்மணியானவள் முன்பு தமிழர்கள் வாழ்ந்த அதே கிராமத்தில் தமிழர்களைத் துரத்தியடித்து விட்டு குடியேற்றப்பட்டவள் என்றும் அதே சிங்களக் குடியேற்றத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் எமது தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால்தான் தான் அந்தச் சிங்களப் பெண்மணியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நியாயப் படுத்தியும் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அத்தமிழ் வாலிபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குச் செய்த பங்களிப்புக்களையும், அவன் இல்லாது விட்டால் அங்குள்ள பெரியதொரு காட்டுப் பிரதேசத்திற்கு வழிகாட்டி இல்லை என்பதையும் அந்தப் பொறுப்பாளர் அறிவித்திருந்தார்.
அதற்குத் தேசியத் தலைவர் அவர்கள் உறுதியாக ‘அனைவருக்கும் ஒரே நீதிதான்’ என்றும் அச்சிங்களப் பெண்மணியை அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்புவதற்கு முன்பு அப்பெண் அறியக்கூடியதாக அவ்விளைஞனுக்கு மரண தண்டனை வழங்கும் படியும் அதன் பின்பு அப்பெண்ணைப் பாதுகாப்பாக அவரது சொந்தக் கிராமத்திற்கு அனுப்பும்படியும் அறிவித்திருந்தார். மறுநாள் தண்டனை நிறைவேற்றப்பட்ட விடயமும், சிங்களப் பெண் பாதுகாப்பாக அவரது கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட விபரமும் பிரதேசப் பொறுப்பாளரால் தேசியத் தலைவர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் படித்த தேசியத் தலைவர் அவர்கள் அங்கிருந்த தளபதிகளுக்குக் காட்டிவிட்டு, அனைவருக்கும் ஒரே நீதிதான் என்று உறுதியாகக் கூறினார்.
-ராவணன் தமிழன்
No comments:
Post a Comment