Tuesday, September 17, 2013

கருப்புப் பணம் எவ்வளவு? கைவிரிக்கிறது மத்திய நிதியமைச்சகம்...

படம்

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியர்கள் எவ்வளவு கருப்புப்பணத்தைப் பதுக்கிவைத்துள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆய்வு இன்னமும் நிறைவடையவில்லை என்றும், இதனால்,கருப்புப் பணத்தின் அளவு குறித்த எந்தவொரு மதிப்பீட்டையும் இதுவரை மேற்கொள்ள இயலவில்லை என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், மத்திய நிதியமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கருப்புப் பணம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு, தில்லியைச் சேர்ந்த பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசியப் பயிலகம் (என்.ஐ.பி.எஃப்.பி.), பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசியக் குழுமம் (என்.சி.ஏ.ஈ.ஆர்.) மற்றும் ஃபரீதாபாதில் உள்ள தேசிய நிதி நிர்வாகப் பயிலகம் (என்.ஐ.எஃப்.எம்.) ஆகிய 3 முக்கிய அமைப்புகளுக்கு, மத்திய நிதியமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி உத்தரவிட்டது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக விதிக்கப்பட்ட 18 மாத காலக்கெடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில், மேற்கண்ட பதிலைத் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சகம்,ஆய்வு முடிவடையும் வரையில்,மேற்கொண்டு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சில பிரிவுகளைச் சுட்டிக்காட்டித் தெரிவித்துள்ளது.

50,000 கோடி டாலர் முதல் 1,40,000 கோடி டாலர் வரையான மதிப்புக்கு கருப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என வெவ்வேறு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணத்தின் மதிப்பு, 46,200 கோடி டாலர் அளவுக்கு இருக்கலாம் என குளோபல் ஃபைனான்ஷியல் இன்டக்ரிடி என்ற அமைப்பின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

ஆனால், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணம் குறித்து நம்பத்தகுந்த மதிப்பீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய நிதியமைச்சகம்,கருப்புப் பணம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான ஆய்வு,கருப்புப்பண பதுக்கல் நடவடிக்கைகளின் தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அதனால் எழுந்துள்ள பரந்துபட்ட விளைவுகள் பற்றி எடுத்துரைக்கும் என்று தெரிவித்துள்ளது.

-தமிழ் செய்திகள்

No comments:

Post a Comment