Thursday, September 19, 2013

பிள்ளையார் கரைப்பும் அப்பாவித் தமிழர்களும் ! இயற்கையை பாதுகாப்பது உங்கள் கையில்

இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள பிள்ளையார் சுமார் 20 கிலோ வெள்ளியில் செய்யப்பட்டது . இதன் விலை சுமார் 10 இலட்சம் ரூபாய் ஆகும். இந்த பத்து இலட்சம் ரூபாய் கடலில் எந்த பயனும் இல்லாமல் தான் இருக்கப் போகிறது.



பிள்ளையார் கரைப்பும் அப்பாவித் தமிழர்களும் !

இயற்கையை பாதுகாப்பது உங்கள் கையில் !

விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் தமிழர்கள் பிள்ளையாரை முதன்மை படுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள். பிள்ளையார் வழிபாடு பல ஆயிரம் காலங்களாக தமிழகத்தில் இருந்து வருகிறது. திருமூலர் 'ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை' என்று பாடி பிள்ளையாரை சிறப்பிக்கிறார்.

பிற்கால ஔவையாரும், ' தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சேர்வார் தமக்கு' என்று பாடியுள்ளார். பல தமிழ் மெய்யியல் அறிஞர்கள் பிள்ளையாருக்கு காப்பு எழுதி வைத்து பாடி உள்ளனர். பிள்ளையாரை குறித்த தத்துவ விளக்கங்கள் பக்தி இலக்கியங்களில் நிரம்பி இருந்தாலும், அதனை சுற்றி பல புராண இட்டுக் கதைகளும் இருந்தே வருகிறது. இந்தியாவில் முதல் பிள்ளையார் கோவிலும் தமிழகத்தில் தான் தோன்றியது. தமிழ் ஆசிவக கடவுளாக பிள்ளையார் சித்தரிக்கப்பட்டாலும், வடநாட்டில் பிள்ளையாரை சுற்றி பல கதைகள் பின்னப்பட்டு பிள்ளையாருக்கு பெரு விழா எடுத்து வருகிறார்கள். இது ஒரு மதத்தின் அடையாளமாக இப்போது மாறி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பிள்ளையாருக்கு இவ்வளவு பெரிய பேரணியோ, விழாவோ எடுக்கப்பட்டது இல்லை. ஆரிய இந்துத்வா நெறியை தீவிரமாக பரப்பும் நபர்கள் திட்டமிட்டே விநாயகர் சதுர்த்தி என்னும் நிகழ்வை தமிழகத்தில் பெரு விமர்சையாக கொண்டாட தீர்மானித்தனர். வீடுகளில் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வை , வீதிகளில் பெரும் சத்தத்துடன் கொண்டாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். வீட்டுக் கிணற்றில் பிள்ளையார் சிலையை மூழ்கடித்த தமிழர்கள், இப்போது கடலில், ஏரியில் கொண்டு போய் கரைக்கும் நிலைக்கும் ஆளாக்கப்பட்டனர். பிற்காலத்தில், பெரும் பெரும் பிரமாண்ட பிள்ளையார்கள் தோற்றுவிக்கப்பட்டது. பல வர்ணங்கள் , வடிவமைப்புகள் பிள்ளையாருக்கு கொடுக்கப்பட்டது. இது ஒரு வியாபாரமாக உருவாகி, இன்று பல ஆயிரம் , லட்சம் பிரமாண்ட பிள்ளையார்கள் இந்த தினத்தன்று உருவாக்கப்படுகிறது. இந்த சிலைகள் அனைத்தும் கொண்டு போய் கரைக்கும் இடமாக கடல் விளங்குகிறது.

ஏற்கனவே , பல ஆயிரம் டன்கள் எடை கொண்ட குப்பைகள் கடலில் கலந்து கடல் மாசடைந்து உள்ளது. ரசாயனம் கலப்பதாலும், குப்பைகள் சேர்வதாலும் , கடல் வாழ் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இந்த நிலையில் பிள்ளையாருக்கு பல லட்சம் சிலைகள் உருவாக்கி அவற்றை கடலில் கரைப்பதால் கடல் வளங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த சிலைகளில் ரசாயன பூச்சு இல்லை என்று அரசும் உறுதி செய்வதில்லை . உறுதி செய்ய அரசுக்கு போதிய வசதியும் இல்லை. அதனால் பிள்ளையார் சிலை வியாபரம் செய்யும் வியாபாரிகள் பல வண்ணங்களில் ரசாயனத்தை பிள்ளையாருக்கு பூசுகின்றனர். பாதரசத்தை பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் ரசாயன கலவையை கொண்டு பல பிரமாண்டசிலைகள் வேறு உருவாக்கப்படுகிறது . அதன் மேல் பல வர்ணங்கள். அதில் பல்வேறு அலங்கார உலோக இணைப்புகள் வேறு இணைக்கின்றனர்.

இவை அனைத்தும் கடலில் கரைப்பதால் , கடல் தான் மாசுபடுகிறது . இயற்கை வளங்கள் தன்னுடைய இயல் தன்மையை இழக்கிறது. இந்த சிலைகள் முற்றிலும் கடலில் கரைய சில மாதங்கள், ஆண்டுகள் கூட தேவைப்படுகிறது. நமக்கு எப்படி வீடு என்பது நாம் வாழும் இருப்பிடமாக இருக்கிறதோ , அப்படித் தான் கடல்வாழ் உயிர்களுக்கு கடல் தான் வீடு இருப்பிடம் எல்லாமே. நம்வீட்டில் குப்பையை கொட்டினால் நமக்கு கோபம் வருகிறது அல்லவா? அப்படி இருக்கும் போது கடல்வாழ் உயிர்களுக்கு அதன் வீடாகிய கடலில் குப்பையை கொட்டினால் கோபம் வராதா ?

இதை நாம் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும். பிள்ளையார் நான்மியை யாரும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை அக்காலத்தில் நம் வீட்டில் எளிமையாக கொண்டாடியதை போல் கொண்டாடினால் எந்த சிக்கலும் இல்லை . சிறிய அளவிலான களிமண் பிள்ளையாரை மட்டுமே உருவாக்கி அதை நீரில் கரைத்தாலும் எந்த பாதிப்பும் இல்லை . ஆனால் பிரமாண்ட பிள்ளையார் சிலையை உருவாக்கி அதை கடலில் குப்பையாக சென்று சேர்ப்பது இயற்கைக்கு விரோதமானது. கரையாத தன்மையுடை எந்த அலங்கார இணைப்புகள், உலோகங்கள், கலவைகள் பிள்ளையாருக்கு நாம் சூட்டக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் ரசாயன கலவையை வைத்து பிள்ளையாரை உருவாக்கக் கூடாது. இவற்றையெல்லாம் நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பல்லின மக்களை முகம் சுளிக்க வைக்கும் பெரும் சத்தம், பெரும் பேரணி, நெரிசல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இத்தைகைய பண்பாடு தமிழர்கள் முன்பு கடைபிடிக்கவும் இல்லை. தற்காலத்தில் வந்த பழக்கம் தான் இந்த பிரமாண்ட பிள்ளையார் பேரணி , திருவிழா, கடலில் கரைப்பது போன்றதெல்லாம்.

ஆகவே தமிழர்களே, பிள்ளையாரை முன் காலத்தில் வழிபட்டது போல் எளிமையாக இல்லத்தில் சிறு களிமண் பிள்ளையார் சிலை வைத்து வழிபடுங்கள் . அருகாமையில் உள்ள கிணறு , குளங்களில் அதை கரைத்து விடுங்கள். தற்காலத்தில் உள்ள பிரமாண்ட பிள்ளையார் சிலை , ஊர்வலம், கடலில் கரைப்பு போன்ற ஆடம்பரத்தை தவிர்த்து இயற்கைக்கு உதவுங்கள்.

சென்னையில் மட்டும் 1850 பிள்ளையார் சிலைகள் இன்று கடலில் கரைக்கப் பட்டது. இந்து எழுச்சி விழாவாக அறிவிக்கத் தொடங்கின . இஸ்லாமியர் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக இவ்விழாவை முன்னெடுக்க தமிழர்களை கொம்பு சீவி விட்டனர் வடநாட்டு இந்துத்வா அமைப்புகள். ஒவ்வொரு சிலையின் அருகிலும் வடமொழி எழுத்தை தாங்கிய ஓம் என்ற வாசகம் பொருந்திய கொடியை பார்க்கலாம். ஒவ்வொரு பிள்ளையார் சிலை நெற்றியிலும் சமஸ்க்ரிதத்தில் ஓம் என்று எழுதப் பட்டிருக்கும். இந்த திட்டமிட்ட சமஸ்க்ரித்த இந்தித் திணிப்பை தமிழர்கள் தட்டிக் கேட்கவும் முடியாது.

அப்பாவித் தமிழர்களும் இவ்விழா தமிழர்கள் விழா என்று நம்பி , வடநாட்டில் நடப்பது போல் ஒருவார கால விழாவாக கொண்டாட விளைந்தனர். அதனால் பிள்ளையார் நான்மி நாள் முடிந்தும் , ஒரு வார காலத்திற்கு தமிழர்கள் வீதியில் ஆங்காங்கே பிள்ளையார் சிலையை வைத்து , பெரும் சத்தத்துடன் பாடல் ஒலிக்கச் செய்தனர். அருகில் பள்ளிகள், மருத்துவ மனைகள், குடியிருப்புகள் இருந்தாலும் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் நாள் முழுவதும் பாடலை ஒலிபரப்புகின்றனர். பின்பு இந்த சிலைகளை தாரை தப்பட்டைகள் முழங்க சாலையில் கூட்டம் கூட்டமாக நகர்த்தி செல்கின்றனர். இதனால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

மேலும் இந்த சிலைகளை ஒரு வார காலம் பாதுகாக்க ஒவ்வொரு சிலைக்கும் மூன்று அல்லது நான்கு காவல்துறை பணியாட்கள் தேவைபடுகின்றனர். நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த போதிய அளவு காவல்துறையினர் இல்லை என்று புலம்பும் அரசு சென்னையில் மட்டும் பல ஆயிரம் காவல்துறையினரை பிள்ளையார் பாதுகாப்புக்கு மட்டும் நியமிக்கிறது. கடலில் கரைக்கும் நாளில் மட்டும் 18,000 காவல்துறையினர் சென்னையில் பிள்ளையார் ஊர்வலத்தில் நியமிக்கப் படுகின்றனர். குறிப்பாக மசூதி வழியில் செல்லும் ஊர்வலத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப் படுகிறது.

கடலில் ஏற்கனவே பல குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இப்போது இத்தனை பிள்ளையார் சிலைகளை கடலில் கரைப்பதை சுற்றுப் புற சூழல் ஆர்வலர்கள் கண்டிகின்றனர். இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள பிள்ளையார் சுமார் 20 கிலோ வெள்ளியில் செய்யப்பட்டது . இதன் விலை சுமார் 10 இலட்சம் ரூபாய் ஆகும். இந்த பத்து இலட்சம் ரூபாய் கடலில் எந்த பயனும் இல்லாமல் தான் இருக்கப் போகிறது. இது கடலில் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கரையாது. இப்படி பணத்தை செலவு செய்வதற்கு பதில் மதவாதிகள் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் உதவி செய்தால் அது உண்மையான கடவுள் வழிபாடாக அமையும். ஆனாலும் இந்துத்வா அமைப்பினர் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. ஆயிரக்கணக்கில் ரசாயனப் பிள்ளையார்கள் கடலில் கரைப்பதால் கடல் மாசு ஏற்படுகிறது. ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு, தொடர்ந்து பாடல் ஒலிப்பதால் ஒலிமாசும் ஏற்படுகிறது .

இதையெல்லாம் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், பொது மக்களுக்கும் உள்ளது. வடநாட்டு மதவாதிகள் பேச்சை கேட்டு இப்போது வீணான ஆடம்பர பிரமாண்ட பிள்ளையார் ஊர்வலங்களை இனியும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. நமது சுற்றுப் புற சூழலில் நாம் தான் பாதுகாக்க வேண்டும். வடநாட்டு மதவாத சதிகளுக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் தமிழர் பண்பாட்டை பாதுகாத்திட முன் வர வேண்டும். ஆரிய இந்துக்களின் பொய்யான மதவாதத்திற்கு துணை போகக் கூடாது. தமிழர் மெய்யியல் நெறியை போற்றிட வேண்டும்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment